-யாழ் நிருபர்-
நெருப்பால் சூடுவைத்து சித்திரவதை செய்யப்பட்ட 12 வயதுச் சிறுவன் ஒருவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த 12 வயதுச் சிறுவன் ஒருவனே இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுள்ளான்.
சிறுவனின் தாயின் கணவர் நெருப்பால் சுட்டதில் சிறுவனுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. கை முகம் எனப் பல இடங்களிலும் காயங்கள் காணப்படுவதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு தீக் காயத்திற்கு இலக்கான சிறுவன் தீப்புண்ணுடன் நேற்று பாடசாலைக்கு சென்றுள்ளான்.
அதனை அவதானித்த ஆசிரியர்கள் அவனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறுவனிடம் வாக்குமூலம் பெற்று சட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர் பொலிஸார்.
விசாரணையின்போது தனது கணவரை பாதுகாக்கும் நோக்கில் தானே மகனுக்குச் சூடுவைத்ததாக குறித்த சிறுவனின் தாயார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.