மின் விநியோகத் தடை இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுல்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் 3 மின்பிறப்பாக்கிகள் செயலிழந்தன.
இதன் காரணமாக, மின்சார தேவையை நிர்வகிக்க முடியாததால், கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சுழற்சி முறையில் ஒன்றரை மணி நேர மின் விநியோகத் தடையை அமுல்படுத்தப்பட்டது. இருப்பினும், பௌர்ணமி தினம் என்பதால் நேற்று முன்தினம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவில்லை.
அதேநேரம் சுழற்சி முறையில் ஒரு மணி நேரம் நேற்றைய தினம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டது.
செயலிழந்த 3 மின் பிறப்பாக்கிகளை இன்று வெள்ளிக்கிழமை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, நேற்று பிற்பகல் வரை செயற்படாமல் இருந்த மின்பிறப்பாக்கிகள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளன.
மின் விநியோகத் தடையை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.