அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்று புதன்கிழமை ஒரு முக்கியமான சட்டத்தில் கையெழுத்திட்டார்.
இந்த சட்டம், குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட ட்ரம்ப் நிர்வாகத்தை கட்டாயப்படுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆரம்பத்தில் இந்த ஆவணங்களை வெளியிடும் முயற்சியை ட்ரம்ப் எதிர்த்தாலும், தனது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட அரசியல் அழுத்தம் காரணமாக அவர் இந்த முடிவுக்குப் பணிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் ஒரு சமூக ஊடகப் பதிவில்,
“குடியரசுக் கட்சியை விட ஜனநாயகக் கட்சியினரையே அதிகம் பாதிக்கும் ‘எப்ஸ்டீன்’ விவகாரத்தை, எங்களுடைய வெற்றிகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப ஜனநாயகக் கட்சியினர் பயன்படுத்துகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய சட்டமூலத்தின்படி, அமெரிக்க நீதித்துறை, எப்ஸ்டீன் தொடர்பான அனைத்துக் கோப்புகள், தகவல் பரிமாற்றங்கள் மற்றும் 2019-இல் சிறையில் அவரது மரணம் குறித்த விசாரணைகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் 30 நாட்களுக்குள் வெளியிட வேண்டும்.
எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் மற்றும் நடப்பில் உள்ள விசாரணை விவரங்கள் மட்டுமே திருத்தங்களுக்கு உட்படுத்தப்படலாம்.
ஆனால், “சங்கடம், நற்பெயருக்கு பாதிப்பு அல்லது அரசியல் ரீதியான உணர்திறன்” போன்ற காரணங்களுக்காக எந்தத் தகவலையும் நிறுத்தி வைக்க முடியாது என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது.
இந்த ஆவணங்களை வெளியிடுமாறு, ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சியின் எதிர்ப்பாளர்கள் மற்றும் சில ட்ரம்ப் ஆதரவாளர்கள் அடங்கிய ஒரு கூட்டு முயற்சிகள் மேற்கொண்டனர்.
சட்டம் இயற்றப்படுவது தவிர்க்க முடியாதது என்று வார இறுதியில் ட்ரம்ப் உணர்ந்த பிறகு, அவர் தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.
இந்த எப்ஸ்டீன் விவகாரம் குடியரசுக் கட்சியின் முக்கிய நோக்கங்களிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதாக அவர் கருதினார்.
“நாங்கள் பெற்ற அனைத்து வெற்றிகளிலிருந்தும் குடியரசுக் கட்சியினர் தங்கள் கவனத்தை அகற்ற நான் விரும்பவில்லை,” என்று ட்ரம்ப் தனது முடிவுக்கு விளக்கம் அளித்தார்.