-அம்பாறை நிருபர்-
சுற்றுலா விஸாவில் இலங்கை வந்து நகைத் தொழிலில் ஈடுபட்ட இந்திய பெண் வியாபாரிக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று பிணை வழங்க இன்று சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இந்திய தமிழ்நாட்டை சேர்ந்த அழகச்சாமி தமிழ்ச்செல்வி (வயது – 48) என்பவருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
நகைத் தொழில் மற்றும் நகைக் கடைகளை நடாத்துபவர்கள் மற்றும் விசேட பொலிஸ் பிரிவினர் ஆகியோரிடம் இருந்து கிடைக்கபெற்ற முறைப்பாட்டிற்கமைய சோதனை நடவடிக்கை மேற்கொண்ட கல்முனை தலைமையக பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டம் அருகில் வைத்து சந்தேகத்திற்கிடமாக நடமாடிய பெண்ணை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து மாதிரி நகைகளுடன் ஏனைய சில பொருட்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது 1 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் எதிர்வரும் திங்கட்கிழமை வரை வழக்கு மறுதவணை இடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்விடயம் குறித்து கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் குழுவினர் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.