சிங்கராஜா வனப்பகுதியின் இடையக வலயத்தில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளைச் சட்டவிரோதமாகப் பிடித்து சேகரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு சீனப் பிரஜைகளுக்கும் மொத்தமாக 76.4 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கலவானை நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, சந்தேகநபர்கள் தமக்கு எதிராகச் சுமத்தப்பட்ட 143 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள சிங்கராஜா வனப்பகுதியின் இடையக வலயத்தில், பூச்சிகள் மற்றும் ஊர்வன உள்ளிட்ட 41 குடும்பங்களைச் சேர்ந்த 300 இற்கும் மேற்பட்ட பாதுகாக்கப்பட்ட உயிரினங்களைச் சட்டவிரோதமாகப் பிடித்து வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்தன.
மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்கிய நான்கு சீனப் பிரஜைகளும், இலங்கைக்கே உரித்தான உயிரினங்கள் உள்ளிட்ட பூச்சிகள் மற்றும் ஊர்வனவற்றைச் சேகரித்துக் கொண்டிருந்தபோது கடந்த நவம்பர் 9ஆம் திகதி வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
உடவளவை தேசிய பூங்காவின் பனஹதுவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து, சந்தேகநபர்கள் அன்றைய தினமே கலவானை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நால்வருக்கும் மொத்தமாக 76.4 மில்லியன் ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










