அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் கேரளா கஞ்சாவினை சூட்சுமமாக பதுக்கி வைத்திருந்த சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒராபி பாஸா வீதியை சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபரே இதன் போது கைது செய்யப்பட்டடுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
இரண்டு சந்தேக நபர்கள் கடந்த புதன்கிழமை கேரளா கஞ்சா மற்றும் ஒரு தொகை பணத்துடன் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் இரு வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் 5 நாட்கள் தடுப்புகாவலில் வைத்து விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் போது நேற்று திங்கட்கிழமை மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனது வீட்டில் சூட்சுமமாக கட்டிலின் கீழ் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ 169 கிராம் கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மேலும் கைதான சந்தேக நபர் உட்பட கேரளா கஞ்சா மற்றும் சான்றுப் பொருள்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி சட்டத்தரணி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் குணசிறியின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு வலய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க மேற்பார்வையில் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.