மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பில் விரைவில் தீர்வுகாணப்பட வேண்டுமென இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் குறித்த விடயத்தினை முழுமையாக முன்வைக்க முடியாத வகையில் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
இராசமாணிக்கம் சாணக்கியன் சபை விவாவத்தில் கருத்துத் தெரிவிக்கும் போது, சபாநாயகர் குறுக்கிட்L “நீங்கள் பேசுவது தேசிய பிரச்சினை இல்லை” என தெரிவித்த சபாநாயகர், அடுத்த பேச்சாளருக்கு வாய்ப்பை வழங்கியுள்ளார் .இந்த நிலையிலே, சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதனையடுத்து கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கேள்விகளை முன்வைப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்குமாறு கோரினார்.
தமக்கான நேரத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குக் கேள்விகளைத் தொடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் எனச் சபையில் கோரினார்.