முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில பிரதேசங்களில் இடம்பெறும் சட்டவிரோதமான செயல்கள் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது நேற்று சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பனிக்கன்குளம், கிழவன்குளம், பதினெட்டாம் போர், கொக்காவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏ 9 வீதியின் இரண்டு புறங்களிலும் உள்ள காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக தொடர்ச்சியாக மணல் அகழ்வு மற்றும் மரக்கடத்தல் இடம்பெற்று வந்துள்ளது.
அனுமதிப்பத்திரங்களை பெற்றவர்கள் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறியும் அனுமதி பத்திரங்கள் பெறப்படாதும் சட்டவிரோதமாக ஆற்றில் உழவு இயந்திரங்களை பயன்படுத்தி மணல்களை ஏற்றுகின்றனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பதினெட்டாம் போர் பகுதியில் நேற்று நண்பகல் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் குறித்த விடயங்களை செய்தி சேகரிக்க சென்று இருந்தார்.
இதன்போது ஏ 9 வீதியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் காட்டு பகுதியில் மணல் கொண்டு வந்து குவிக்கப்படுவதை காணொளி பதிவு செய்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் ஊடகவியலாளர் தவசீலனின் ஒளிப்படகருவியை பறிக்க முற்பட்டதோடு ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டதோடு கொலை அச்சுறுத்தல் விடுத்த நிலையில் மாங்குளம் பொலிஸாரின் உதவியுடன் தவசீலன் குறித்த இடத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
காட்டுக்குள் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவது மாத்திரமின்றி அங்கு வருகைதந்து யார் வீடியோ எடுக்க சொல்லியது என்றும் வீடியோ எடுக்க விடாது தடுத்து சட்டவிரோத மணலுடன் நின்ற உழவு இயந்திரத்தை அந்த இடத்தில் இருந்து எடுத்து சென்றதோடு ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாங்குளம் பொலிஸார் குறித்த காட்டுக்குள் செல்லும் வீதியை ஜேசிபி இயந்திரம் கொண்டு வெட்டி குறித்த காட்டுக்குள் செல்ல முடியாதவாறு செய்துள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.