கைவிலங்கு மற்றும் கைத்துப்பாக்கியுடன் தப்பியோடிய இளைஞன்

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை பொலிஸாரினால் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவ்வேளை குறித்த இளைஞன் பொலிஸாரிடமிருந்து கைத்துப்பாக்கி மற்றும் கைவிலங்கு என்பவற்றை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராமநாதபுரம் பொலிஸ் காவல் நிலையத்தில் கடமைபுரியும் பொலிஸ் அதிகாரிகள் மூவர் நேற்று பிற்பகல், கசிப்பு உடமையில் வைத்திருந்நதாக தெரிவித்து இளைஞர் ஒருவரைக் கைது செய்ய சென்றிருந்தனர்.

அந்நிலையில், பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது

அப்போது, அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இளைஞன் கைவிலங்குடன் பொலிஸாரி்ன் கைத்துப்பாக்கியையும் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.

அதன்பின், குறித்த பகுதியில் அதிகளவான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

எனினும், குறித்த தப்பியோடிய இளைஞனை கைது செய்ய முடியவில்லை.

அதனைத்தொடர்ந்து, இளைஞரின் தாயார் மற்றும் கிராம மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தையின் அடிப்படையில் தப்பியோடிய இளைஞனிடமிருந்து கைத்துப்பாக்கி மற்றும் கைவிலங்கு என்பன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.