குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பயிர்ச் செய்கைகளுக்கு குரங்குகளினால் ஏற்படும் பாதிப்பினை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளின் இனப்பெருக்கத்தை தடுக்க கருத்தடை திட்டமொன்று பரீட்சார்த்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
மாத்தளை – ஹரஸ்கம பிரதேசத்தில் இந்த பரீட்சார்த்த திட்டம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. எனினும், இந்த பரீட்சார்த்த திட்டம் தற்பொழுது கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கருத்தடை மேற்கொள்வதற்கு தேவையான மிருக வைத்தியர்களுக்கு தட்டுப்பாடு மற்றும் கிரிதலே மிருக வைத்திய சிகிச்சை நிலையத்திற்கு குரங்குகளை கொண்டு செல்வதில் ஏற்படும் அதிக போக்குவரத்து செலவு போன்ற காரணிகளினால் இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.