-யாழ் நிருபர்-
யாழில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கசிப்பு குடித்து விட்டு கிணற்றுக்கு அருகே படுத்துறங்கிய நபர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த கணேசராசா சுபாகரன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் கடந்த 29ஆம் திகதி பூட்டியிருந்த வீட்டுக்கு அருகில் உள்ள பழைய கிணற்றுக்கு அருகாமையில் கசிப்பு அருந்திவிட்டு உறங்கியுள்ளார். இவ்வாறு உறங்கியவர் திடீரென கிணற்றினுள் விழுந்துள்ளார்.
பின்னர் உறவினர்கள் அவரை தேடியவேளை திங்கட்கிழமை கிணற்றில் சடலமாக காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.