இன்று வெள்ளிக்கிழமை காலை சாகரிகா ரயில் தடம் புரண்டதால் கரையோர ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்புகளுக்கு மாற்றீடாக, இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) பேருந்துகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சஞ்சீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற கரையோர ரயில் பாதையின் எதிர்கால போக்குவரத்து நடவடிக்கைகள் குறித்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அதன்படி, இன்று மாலை 04.45 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பெலியத்தை, மாத்தறை, காலி ஆகிய இடங்களுக்கு 03 பேருந்துகளும், மாலை 05.00 மணிக்கு அம்பலாங்கொடை, ஹிக்கடுவை ஆகிய இடங்களுக்கு 02 பேருந்துகளும், மாலை 06.15 மணிக்கு காலிக்கு 03 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தப் பேருந்துகளில் பயணிப்பதற்கு ரயில் பருவக்கால அனுமதிப்பத்திரம் (Season Ticket) அல்லது ரயில் பயணச்சீட்டு வைத்திருப்பது அவசியமாகும் எனவும், பயணிகளிடம் மேலதிகமாக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஞ்சீவ கனகரத்ன மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் மதியம் 2.00 மணிக்கு காலி மற்றும் பெலியத்தை நோக்கி 02 பேருந்துகளை வழங்கியுள்ளோம். அதேபோல் மாலை 4.00 மணிக்கு மாத்தறைக்கு ஒரு பேருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகள் கோட்டை ரயில் நிலையத்திற்கே சென்று பயணிகளை ஏற்றிச் செல்லும்.
இடையில் வேறு பயணிகள் எவரும் ஏற்றப்படமாட்டார்கள். இது ரயில் பயணிகளுக்கான விசேட பேருந்து சேவையாகும். அதன் பின்னர் 04.45 மணிக்கு கோட்டையிலிருந்து பெலியத்தை, மாத்தறை மற்றும் காலிக்கு 03 பேருந்துகள் செல்லும்.
மாலை 5.00 மணிக்கு அம்பலாங்கொடை மற்றும் ஹிக்கடுவைக்கும், இறுதியாக மாலை 6.15 மணிக்கு காலிக்கு 03 பேருந்துகளும் இயக்கப்படும். இந்தச் சேவை முழுமையாக ரயில் பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கானது மட்டுமே, என்றார்.