பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை எதிர்வரும் 29 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இணையத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களைப் பதிவேற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கணவதிப்பிள்ளை மோகனை, கடந்த 2021 மே 3ஆம் திகதி ஏறாவூர் பொலிஸார் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சிறைச்சாலையிலிருந்து அழைத்துவரப்பட்ட மோகன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவரை தொடர்ந்து எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.