-பதுளை நிருபர்-
பதுளையில் வயல் வெளியில் கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் நபர் ஒருவர் பலத்த காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸ் தெரிவித்தனர்.
இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
காயமடைந்த நபர் கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் வயல் வெளியில் நெல் அறுவடையில் ஈடுபட்டிருந்த போது குறித்த பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக கட்டி வைக்கப்பட்டிருந்த கட்டுத் துப்பாக்கி வெடித்துள்ளது.
துப்பாக்கி வெடித்ததில் குறித்த நபரின் வலது காதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் காயமடைந்த நபர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த துப்பாக்கியை கட்டினார் என சந்தேகிக்கப்படும் 41 வயதுடைய கின்னேருவ கிராந்துருகோட்டை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் மஹியங்கனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை கிராந்துருகோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஷ் சத்துரங்க தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.