
கடத்தப்பட்ட மாணவியை காப்பாற்ற முயன்ற இளைஞனின் அனுபவம்!
கம்பொல- தவுலகல பகுதியில்,நேற்று முன்தினம் சனிக்கிழமை கடத்தப்பட்ட 16 வயது மாணவியை காப்பாற்ற முயற்சி செய்த இளைஞர், பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இளைஞர்,
“நான் அந்த வீதியூடாக சென்று கொண்டிருக்கையில், மாணவி ஒருவரை வாகனம் ஒன்றில் வலுக்கட்டாயமாக ஏற்றுவதை அவதானித்தேன், ஓடிச்சென்று வாகனத்தில் ஏறி, அவரை காப்பாற்ற முயற்சித்தேன், வாகனத்தில் இருந்தவர்கள் என்னை தாக்கினார்கள்
கடத்தப்பட்ட நேரத்தில் வாகனத்தின் பின்புறத்தில் மூன்று பேர் இருந்தனர், அவர்கள் தொடர்ந்து வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றனர், என்னை தாக்கி, என்னை வாகனத்தில் இருந்து கீழே தள்ளி விட்டனர்.
அப்போது நான் வீதியில் விழுந்து விட்டேன், எனது முகம், கைகள் மற்றும் காலில் காயம் ஏற்பட்டது” என தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை காலை கம்பொல- தவுலகல பகுதியில், வீதியால் இரண்டு பாடசாலை மாணவிகள் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த வாகனம் ஒன்றிலிருந்து சிலர் இறங்கி, வீதியால் சென்று கொண்டிருந்த மாணவிகளில் ஒருவரை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றனர், அவ்வேளை இளைஞர் ஒருவர் ஓடிச்சென்று, குறித்த வாகனத்தில் ஏறி தொங்கியபடியே அம்மாணவியை காப்பாற்ற முயன்றார்
இந்த காணொளி, சமூக ஊடகங்கில் பலரால் பகிரப்பட்டு இருந்தது. காணொளியை பார்த்தவர்கள் மாணவியை காப்பாற்ற முயன்ற இளைஞரை பாராட்டி வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து, இடம்பெற்ற பொலிஸாரின் விசாரணையில், குறித்த மாணவி விடுதி ஒன்றில் தங்கி இருப்பதாக தெரிய வந்தது
கடத்தலில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபர், சிறுமியின் தந்தை வழி உறவினர் என்றும், திருமணப் பிரச்சினை காரணமாக இக்கடத்தல் நடந்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனத்தின் சாரதி நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இருப்பினும், காணாமல் போன மாணவி மற்றும் பிரதான சந்தேகநபர் தொடர்பில் இன்னும் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன.
இதேவேளை, மாணவியைக் கடத்திச் சென்ற சந்தேகநபரான இளைஞன், முதலில் 5 மில்லியன் ரூபாயை கப்பமாக கோரியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், பின்னர் அவர் அதை 3 மில்லியனாகக் குறைத்துள்ளதாகவும், பின்னர் அவர் மாணவியின் தந்தைக்குச் சொந்தமான வாகனத்தை கோரி, 200,000 ரூபாயை வங்கி கணக்கில் வரவு வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, மாணவியின் தந்தை 50,000 ரூபாயை சம்பந்தப்பட்ட கணக்கில் வரவு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
