-கல்முனை நிருபர்-
அம்பாறை மாவட்ட செயலகத்தினால் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்கு படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்திட்டம் அமுலுக்கு வரும் வரை சாய்ந்தமருது பிரதேசத்தில் எரிபொருளை (பெற்றோல், டீசல் ) அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், தொடர்ச்சியாக ஒரு நபர் பெறுவதைத் தடுத்தல், கறுப்புச் சந்தையினை குறைத்தல் ஆகியனவற்றை நோக்காக கொண்டு “Fuel Master Management” என்ற செயலி நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் நேற்று அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய செயலி மூலம் சாய்ந்தமருது IOC இல் பெற்றோல் விநியோகிக்கப்பட்ட அனைத்து வாகனங்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் உதவியுடன் பதிவு செய்யப்பட்டது.
எனினும் இறுதிக்கட்டத்தில் அனைத்து வாகனங்களும் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குள் பிரவேசித்ததால் மக்களுக்கு பெற்றோல் வழங்குவதில் பிரச்சினைகள் ஏற்பட்டதை அவதானிக்க முடிந்தது.
எனவே, அனைவரும் எரிபொருளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
அதனடிப்படையில் நேற்று பெற்றோல் விநியோகிக்கப்பட்ட வாகனங்கள் மீண்டும் 10 நாள் இடைவெளியின் பின்னரே பெற்றோலை பெற்றுக்கொள்ள முடியும்.
ஒரு கிழமைக்கு 2 அல்லது 3 வவுசர்கள் எரிபொருள் பெறக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதால், நேற்று பெற்றோல் பெறாதவர்கள் மாத்திரம் சமுகம் தந்து வேறுதினத்தில் பெற்றோலை பெறமுடியும்.
எரிபொருள் பெற வரும் பொதுமக்கள் இந்த செயலி முறைக்கு முழுமையாக ஒத்துழைப்பு தரும் பட்சத்தில் உத்தியோகத்தர்கள் தன்னார்வ சேவையாக இதனை செய்ய தயாராக உள்ளார்கள்.