நாட்டில் இடம்பெற்ற பல்வேறு ஏடிஎம் அட்டை மோசடிகளுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் நபரொருவர் இவ்வாறான மோசடியில் 200,000 ரூபாவை இழந்துள்ளதாக முறைப்பாடளித்துள்ளார்.
பொலநறுவை ஜெயந்திரபுரவில் வசிக்கும் பாதிக்கப்பட்ட நபர் கடந்த ஆகஸ்ட் 19 அன்று களுத்துறை நகரில் உள்ள ஒரு ஏடிஎம்மிற்கு பணம் எடுக்க சென்றுள்ளார்
அங்கு அவர் பணத்தை எடுப்பதற்கு அறிமுகம் இல்லாத ஒரு நபரின் உதவியை நாடியுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் இனந்தெரியாத நபரிடம் தனது ஏடிஎம் அட்டை மற்றும் அதன் ரகசிய குளியீட்டு இலக்கம் இரண்டையும் வழங்கியுள்ளார்.
அதன் பின்னரே அவர் உதவி கோரிய இனந்தெரியாத நபர் ஏடிஎம் அட்டையை திருப்பி கொடுக்குமு; போது போலியான அட்டையை மாற்றி கொடுத்ததையும் பின்னர் பாதிக்கப்பட்ட நபரின் ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி சந்தேக நபர் 200,000 ரூபாய் பணத்தை மோசடியாக எடுத்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்ததை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது சந்தேகநபர் களுத்துறை தெற்கு மற்றும் வாதுவ பொலிஸ் நிலையங்களில் முன்னர் பதிவு செய்யப்பட்ட குறைந்தது நான்கு இதே போன்ற முறைப்பாடுகளுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.
வங்கியின் சிசிடிவி காட்சிகளில் இருந்து பெறப்பட்ட சந்தேக நபரைக் காட்டும் வீடியோ காட்சியை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர் கீழுள்ள தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
📞 071 – 8591691
📞 071 – 8594360