எரிபொருள் வழங்கலை நெறிப்படுத்த வேண்டிய மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், எரிபொருளைக் கோரியும், இராணுவத்தினரின் தரக்குறைவான செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தும் பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள பிரதான வீதியை மறித்து இன்று செவ்வாய்க்கிழமை காலை மூன்று மணி நேரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள், கமநல சேவை நிலைய அதிகாரிகள் போன்றோருக்கு இதுவரை அத்தியாவசிய சேவையடிப்படையில் எரிபொருள் வழங்கப்படவில்லை
மேலும், குறித்த உத்தியோகத்தர்கள் எரிபொருள் நிலையத்துக்குச் சென்றாலும் அங்குள்ள இராணுவத்தினர் தகாத வார்த்தைகளினால் வசைபாடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் விநியோகத்தினை சீராக முன்னெடுக்க வழிகாட்ட வேண்டிய பிரதேச செயலாளர், இராணுவத்தினரின் செயற்பாடுகளை கண்டு கொள்ளாமல் இருப்பதனால் மக்கள் தமது அன்றாட அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் திணறுகின்றனர்.
எவ்வாறாயினும், போராட்டத்தில் ஈடுபட்ட மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு மட்டும் இன்று மாலை மூன்று லீற்றர் வீதம் எரிபொருள் வழங்க ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.