தெற்கு அந்தமான் கடல் பகுதியை அண்மித்த வங்காள விரிகுடா ஆழ்கடல் பகுதியில் உருவாகியுள்ள தாழமுக்கம், மேல் – வடமேல் திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் நாட்களுக்கு மழையுடனான வானிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மில்லி மீற்றர் வரை பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதேநேரம், நாட்டின் ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நாட்டில் 12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2:30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பதுளை, கொழும்பு, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை இளஞ்சிவப்பு நிற, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீரற்ற வானிலையால் ஏற்படக்கூடிய போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக உயர்தரப் பரீட்சைக்குச் செல்வதற்குச் சிரமங்களை எதிர்நோக்கும் பரீட்சார்த்திகள் உடனடியாக பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.