-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புறாமலை தீவுக்கு செல்லும் உள்ளூர் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய படகு சேவை உரிமையாளர்கள் மூவரை கைது செய்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு தெகிவளை பகுதியில் இருந்து புறா தீவுக்கு சுற்றுலா சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய 60, 40 மற்றும் 45 வயது படகு உரிமையாளர்களை இவ்வாறு குச்சவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர் நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் கடந்த 27 ஆம் திகதி மாலை இடம் பெற்றுள்ளதுடன், இது சம்பந்தமான நடவடிக்கையை 28ஆம் திகதி எடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை 29 ஆம் திகதி காலை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, அவர்களில் ஒருவர் கடுமையான இருதய நோயாளி என தெரிவித்து அவருக்கு சரீர பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், மற்றும் இருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
