மட்டக்களப்பு-அம்பிளாந்துறை பிரதேசத்தில், சட்டவிரோதமாக தங்கியிருந்த மலேசியா பிரஜையான பெண் ஒருவரை, நேற்று புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அம்பளாந்துறை பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில், மலேசிய நாட்டுப் பெண் ஒருவர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்பான 119 என்ற இலக்கத்திற்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் இருந்து சுற்றுலா விசாவில் கடந்த ஒக்டோபர் 5-ஆம் திகதி இலங்கைக்கு வந்த குறித்த பெண், அம்பிளாந்துறை பிரதேசத்திலுள்ள தமது நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்துள்ள நிலையில் அங்கு தவறி விழுந்து அவரது வலது காலை முறிவடைந்துள்ளது.
முறிவடைந்த காலுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது விசா காலம் நிறைவடைந்துள்ளது. உடல்நலக்குறைவால் மீண்டும் நாட்டுக்கு திரும்ப முடியாத குறித்த பெண் தனது விசா காலம் நிறைவடைந்ததை பொருட்படுத்தாது இருந்துள்ளார்.
இதனையறிந்த சிலர், பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்பான 119 என்ற இலக்கத்திற்கு பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மலேசிய பிரஜையான பெண்ணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










