இலங்கைக்கு கடத்தப்படவிருந்த தடை செய்யப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

-மன்னார் நிருபர்-

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சட்டவிரோதமாக மறைத்து வைத்திருந்த தடை செய்யப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகளை மெரைன் பொலிஸார் இன்று காலை பறிமுதல் செய்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை மீனவர்கள் பிடிப்பதாக மெரைன் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து இன்று அதிகாலை கடற்கரையோரத்தில் ராமேஸ்வரம் மெரைன் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன் கம்பெனி ஒன்றில் மெரைன் பொலிஸார் சோதனை செய்தபோது அங்கு சாக்கு பைகளில் தடை செய்யப்பட்ட உயிர் கடல் அட்டைகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மெரைன் பொலிஸார் உயிருடன் இருந்த சுமார் 300 கிலோ எடையுள்ள கடல் அட்டைகளையும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மூவரையும் தனுஷ்கோடி மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்ததா? என்ற கோணத்தில் தொடர்ந்து மெரைன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.