இந்தோனேசியாவில் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விபத்தில், 16 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில், பயணிகள் 35 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பயணிகள் உயிரிழந்தனர்.
மேலும் 10 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனால் பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரித்தது என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த பேருந்து, இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து, யோக்யகர்த்தா நகரத்திற்கு சென்று கொண்டிருந்த போதே விபத்து இடம்பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.