இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பும் எண்ணம் எமக்கு இல்லை

இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பும் எண்ணம் தமக்கு இல்லை, என இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டரின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை நிபந்தனையின்றி நிராகரிப்பதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடான இலங்கை, ஜனநாயகம் மற்றும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மிகுந்த மரியாதையைக் கொண்டுள்ளது.

பல்வேறு கட்சிகள்.குழுக்கள் மற்றும் தனிநபர்களால் வெளியிடப்படும் அறிக்கைகள் இந்திய அரசின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போவதில்லை, என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரான சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டர் பதிவொன்றை இட்டிருந்தார்.

‘இலங்கையில் தற்போது நிலவும் அமைதியின்மையைத் தணிக்க இந்தியப் படையினர் களமிறங்க வேண்டும்’, என அவர் அந்தப் பதிவில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்திய உயர்ஸ்தானிகராலயம் இவ்வாறு தெரிவித்துள்ளது.