இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் 64 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையின்போதே குறித்த 64 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைப் பிரிவு அதிகாரிகள் இன்று புதன்கிழமை திருகோணமலை கடற்பரப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த பல நாள் மீன்பிடி படகொன்றை அவதானித்துள்ளனர்.
அதன்போது, இலங்கையில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக பல நாள் மீன்பிடி படகில் பயணித்த, 7 பேர் உட்பட 50 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் என 64 பேர் கடற்படையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.