
அறநெறி பாடசாலை மாணவர்களின் பஜனை நிகழ்வு
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து சமய கலாசார இணையவழிப் பண்ணிசை பயிற்றுவிப்பாளரின் அனுசரனையுடன் திருஞானசம்பந்த பெருமானின் குரு பூஜைத் திருநாளும், அறநெறி பாடசாலை மாணவர்களின் பஜனை நிகழ்வும் நேற்று திங்கட்கிழமை மாதுமை உடனுறை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்றது.
காலை 7.00 மணிக்கு கோணேஸ்வரப்பெருமானுக்கு விசேட அபிஷேகமும், காலை 9.00 மணிக்கு திருஞானசம்பந்தப்பெருமானுக்கு விஷேட அபிஷேகமும் திருமுறைப் பாராயணத்துடன் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து திருஞானசம்பந்த பெருமானின் திருவீதி உலா இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து மதியம் மகேஸ்வர பூஜை என்று சொல்லப்படும் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.
மாலை 6.45 மணிக்கு அர்த்த ஜாமப்பூஜையை தொடர்ந்து திருஞானசம்பந்த பெருமானின்
சிவசோதி ஐக்கிய அருள் நிகழ்வு நடைபெற்று இனிதே நிறைவடைந்தது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக இந்து சமய கலாசார உத்தியோகத்தர் இலக்குமிதேவி சிறீதரன், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், இந்தியாவிலிருந்து வருகை தந்த ஓதுவாமூர்த்திகள் என பலரும் கலந்து கொண்டனர்.