-கிண்ணியா நிருபர்-
அரசியல் விமர்சகரும் ஆக்கபூர்வ எழுத்தாளருமான அனிஸ்டர் ஜெயராஜ் திடீரென மரணமடைந்துள்ள செய்தி கேட்டு ஆறாத்துயரில் ஆழ்ந்திருப்பதாக சுற்றாடல் அமைச்சர் நஸீர்அஹமட் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் அனுதாப அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நண்பர் அனிஸ்டர் ஜெயராஜ் முஸ்லிம் அரசியல் குறித்து தௌிவான சிந்தனையில் இருந்தவர். தமிழர்களின் அரசியலின் ஈடேற்றம் முஸ்லிம்களையும் அரவணைப்பதில் தானுள்ளது என்பதை அனுபவ ரீதீயாக உணர்ந்து செயலாற்றியவர் மட்டுமல்ல,அவரது எழுத்துக்களிலும் இதை வலியறுத்தியவர்.
ஆயுதப் போராட்டத்தின் திசை திரும்பலே ,விடுதலைப்போராட்டத்தை சீரழித்ததாக கருதியவர். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரஃபுடன் அவருக்கிருந்த நெருக்கம்,பல பரிமாணக் கற்கைகளை அவருக்குள் வளர்த்துவிட்டது.
தேசிய ஐக்கிய முன்னணியை உருவாக்குவதில், அஷ்ரஃபுடன் அவர் எடுத்துக் கொண்ட முயற்சியும் சிறுபான்மை சமூகங்களை ஒன்றிணைக்கவே! அஷ்ரஃபின் அந்த ஏழு நாட்கள்,தென்கிழக்கு அலகு மூன்று சமூகங்களினதும் முன்மாதிரிப் பூமி மற்றும் இன்னும் பல நூல்களை எழுதிய அமரர் அனிஸ்டர் ஜெயராஜ், முஸ்லிம் அரசியலுக்கு விசுவாசியாகச் செயற்பட்ட முன்மாதிரி மனிதர்.
தலைவர் அஷ்ரஃபின் மரணத்தின் பின்னர்,என்னோடு நெருங்கிப் பழகியதில் அவரது குணாதிசயங்களை என்னால் கண்டு கொள்ள முடிந்தது. எனது அரசியல் வளர்ச்சியில் கனதியான பங்களிப்பை நல்கியதோடு இறுதி மூச்சி வரை என்னோடு இணைந்து பணியாற்றியவர்.
கிழக்கின் பூர்வீகத்தில் (திருகோணமலை) பிறந்த அனிஸ்டர் ஜெயராஜ், சிறுபான்மை சமூகங்களின் ஒன்றுபடல் சிந்தனையிலேயே, அவரது கடைசி மூச்சையும் விட்டிருப்பாரெனத், தான் நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவரது பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.