-திருகோணமலை நிருபர்-
திருகோணமலையில் திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதாகவும், பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலேயே அதிக அளவிலான திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக வாகனங்களின் உதிரி பாகங்கள் கழட்டுவது மற்றும் வீடுகளில் கொள்ளையடிப்பதுடன் மோட்டார் சைக்கிளில் சென்று தங்க ஆபரணங்கள் திருடுவது போன்ற திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், அத்துடன் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களில் இருந்து பெற்றோல் திருடுகின்றமை போன்ற திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
உப்புவெளி பொலிஸ் பிரிவில் நேற்று திங்கட்கிழமை இரவு மாத்திரம் 13 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், மொரவெவ பிரதேசத்தில் ஆறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், மாவட்டத்தில் மொத்தமாக 50க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
தங்களது பிரதேசத்தில் எவராவது தேவையற்ற விதத்தில் நடமாடினால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்துமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.