கடந்த பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரையில் மாற்றம் இல்லாமல் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இறக்குமதி, விநியோகம், முகாமை மற்றும் விற்பனை தரவுகளை ஆய்வு செய்த பிறகு தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டு அதிகரிப்பை மறு அறிவித்தல் வரை நீடிக்க நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் இன்று செவ்வாய்கிழமை ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.
இதன்படி மோட்டார்சைக்கிளுக்கு 4 லீற்றரில் இருந்து 7 லீற்றராகவும், முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீற்றரில் இருந்து 8 லீற்றராகவும், பேருந்துகளுக்கு 40 லீற்றரிலிருந்து 60 லீற்றராகவும், மண் அகழ்வு வாகனங்களுக்கு 15 லீற்றரில் இருந்து 25 லீற்றராகவும், கார்களுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றராகவும், கனரக வாகனங்களுக்கு 50 லீற்றரிலிருந்து 75 லீற்றராகவும், சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றராகவும், வேன்களுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றராகவும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.