சமீபகாலமாக நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உடனடி நிதியுதவி வழங்கும் நோக்கில், ஐக்கிய மக்கள் முன்னணியின் ஸ்தாபகர் மற்றும் செயலாளர் நாயகம் திரு. திருமேனி யோகநாயகன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், பேரிடரால் வாழ்வாதாரத்தை இழந்து, பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் மக்களுக்குச் சில முக்கிய சலுகைகளை உடனடியாக வழங்கக் கருணையுடன் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை மீட்பதற்கான தற்போதைய 12 மாத கால அவகாசத்தை மேலும் 06 மாதங்கள் நீட்டித்து, மொத்தம் 18 மாதங்களாக அறிவிக்க வேண்டும்.
வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட கடன்களுக்கான மாதத் தவணைகளைச் செலுத்துவதற்கு 06 மாதங்கள் தாமதிக்க அனுமதிக்க வேண்டும்.
இந்தத் தாமத காலத்தில் கூடுதல் வட்டி, அபராதம் போன்ற சுமைகள் ஏதும் விதிக்கப்படாமல் இருக்க உத்தரவிட வேண்டும்.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட வாகன லீசிங் தவணைக் கட்டணங்களையும் இதேபோல 06 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்.
இந்த ஒத்திவைப்புக் காலத்தில் எவ்விதமான கட்டண உயர்வும் இன்றி உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.