வைத்தியர்களுக்கு எதிராக முகநூலை தவறாக பயன்படுத்திய நபர்: நீதி மன்றின் உத்தரவு

-யாழ் நிருபர்-

வைத்தியர்களுக்கு முகநூலில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட யாழ் உரும்பிராயை சேர்ந்த ரகுராம் என்பவரை மன்னிப்பு கேட்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் இவ்வாறான செயற்பாடுகளில் இனிமேல் இடம்பெறக்கூடாது என எச்சரிக்கையும் விடுத்தது.

குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,

யாழ் உரும்பிராயை சேர்ந்த ரகுராம் என்ற நபர் தன்னை ஒரு வைத்தியராக தெரிவித்து ஏனைய வைத்திய முறைகள் தொடர்பிலும் வைத்தியர்கள் தொடர்பிலும் முகநூலில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் காணொளிகளை பதிவேற்றி வந்தார்.

இந்நிலையில் குறித்த நபருக்கு எதிராக சட்ட வைத்திய அதிகாரி எஸ். பிரவணன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் இன்று புதன் கிழமை வழக்கு விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது குறித்த நபரை தனது தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்ததுடன் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை செய்து வழக்கிலிருந்து விடுவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்