புதிய மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இலங்கை மின்சார சபையினால் கையளிக்கப்பட்ட புதிய மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில், அவதானத்தை செலுத்தி, மின்கட்டணத்தை குறைப்பதற்கான சதவீதத்தை அறிவிக்கவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஏ.எம்.ஆர்.எம் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் நேற்று வியாழக்கிழமை கையளித்துள்ளது.

இதேவேளை, மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இதற்கு முன்னர் பொது மக்களிடம் கருத்து கோரப்பட்ட நிலையில், புதிய யோசனை தொடர்பாக பொதுமக்களின் கருத்து கோரலுக்கு இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதிகரிக்கப்பட்ட அதே சதவீதத்தில் மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மின் கட்டணத்தை 3 சதவீதத்தினால் குறைப்பதற்கான யோசனையை இலங்கை மின்சார சபை, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்தது.

அது தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கோரலில், அதனை விட அதிக சதவீதத்தில் மின் கட்டணத்தை குறைப்பதற்கான இயலுமை, இலங்கை மின்சார சபைக்கு உள்ளதாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையில், தங்களது கைப்பேசிகளுக்கு மின் கட்டண பட்டியலை அனுப்புவதன் ஊடாக பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக கிராமபுற மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்