பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து குஷ் போதைப்பொருளைத் தயாரிக்கும் கும்பல்

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் பெரும்பாலான மக்கள் குஷ் ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த குஷ் ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் புழக்கத்திலிருந்து வருகிறது.

இந்த குஷ் போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதன்படி குறித்த போதைப்பொருளின் பாவனை அப்பகுதி மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தயாரிப்பவர்கள் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து குஷ் போதைப்பொருளைத் தயார் செய்துவருவதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகளை இந்த கும்பல் தோண்டியுள்ளதாக அந்த நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குஷ் ரக போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், குறித்த போதைப்பொருளை உட்கொள்வதன்மூலம் உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.