திருகோணமலை மாவட்டத்திலிருந்து நுவரெலியாவுக்கு பரஸ்பர கள விஜயம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

திருகோணமலை மாவட்டச் செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி தலைமையில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் மாவட்ட பெண்கள் செயலணியினர், நுவரெலியாவுக்கு பரஸ்பர நட்புறவுடனான அனுபவப் பகிர்வு கற்றல் கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகங்களின் ஒத்துழைப்புடன் சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் மற்றும் பாம் பௌண்டேஷன் ஆகிய நிறுவனங்கள் இந்த கற்றல் அனுபவப் பகிர்வு கள விஜயத்தை ஏற்பாடு செய்திருந்தன.

வார இறுதியில் கள விஜயம் மேற்கொண்ட திருகோணமலை மாவட்டச் செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி தலைமையிலான பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் மாவட்டப் பெண்கள் அணியினரை நுவரெலியா மாவட்டச் செயலாளர் நந்தன கலபொட நுவரெலியா மாவட்டச் செயலக “அதிசய மண்டபத்தில்” வைத்து வரவேற்றார். அங்கு பரஸ்பரம் நினைவுச் சின்னங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

குழுவினர் மலையக தோட்டத் தொழிலாள மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்திட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.

மேலும், மலையக மக்களின் அபிவிருத்திக்காக செயலாற்றி வரும் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம், ஸ்ரீலங்கா குடும்பத் திட்டச் சங்கத்தின் சுகாதார சேவை நிலையம், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் ஒரு பிரிவாக நிறுவப்பட்டுள்ள மிதுரு பியச ஆலோசனை சேவைகள் நிலையம், பூண்டுலோயா எல்பிட்டிய பிளாண்டேஷன் ஆகிய இடங்களுக்கும் சென்று அங்கு தேவையுள்ளோருக்கு வழங்கப்படும் சேவைகளையும் அறிந்து கொண்டனர்.

மாகாண மட்டத்தில் பெண்களை வலுவூட்டுவதற்கான செயற்திட்டங்களில் இந்த பரஸ்பர அனுபவப் பகிர்வுக் கற்றல் கள விஜயம் இடம்பெற்றது.

இந்த பரஸ்பர நட்புறவுடனான அனுபவக் கற்றல் கள விஜயம்பற்றிக் கருத்துத் தெரிவித்த இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் ரீ. திலீப்குமார், பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் பாரபட்சங்களையும் இல்லாமலாக்கி பெண்களை ஆளுமை மிக்கவர்களாக வலுவூட்டுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

அதன் அடிப்படையாக பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மாவட்ட செயலக மட்டத்திலும் பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் மாவட்ட மகளிர் செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், பெண்களை வலுப்படுத்தும் வகையில் பயிற்சிகள், செயலமர்வுகள், விழிப்புணர்வுகள், தொழில்துறை உற்பத்திக் கண்காட்சிகள், கற்றல் கள விஜயங்கள், பொருளாதார வாழ்வாதார உதவு ஊக்கங்கள் கிரமமாக இடம்பெற்று வருகின்றன.

இதனோடு இணைந்ததாக சட்டமும் ஒழுங்கும் அமுலாக்கல்;, பொறிமுறைகள், வழிகாட்டல்கள், வழிகாட்டிக் கோவைகள் பரிந்துரைப்புகள் என்பனவும் இடம்பெறுகின்றன.

பிரதேச, மாவட்ட செயலணிகள் மூலம் பெண்கள் சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் துன்புறுத்தல்கள், வன்முறைகள், துஷ்பிரயோகங்கள், கொடுமைப்படுத்தல்கள், சித்திரவதைகள், சுரண்டல்கள், உரிமை மீறல்கள், இளவயதுத் திருமணம், போன்ற பல்வகைப் பாதிப்புக்;கள் நிகழ்வதைத் தடுக்கக் கூடிய பொறிமுறைகளை உருவாக்கி அவற்றை அமுல்படுத்துவதே நோக்கம்” என்றார்.

இந்தக் கற்றல் கள விஜயத்தின்போது (வீ எபெக்ற்) நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் தேவசிகாமணி மயூரன், திட்ட முகாமையாளர் ஆர். றிசாந்தி, திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்ட பெண்கள் அபிவிருத்தி அலுவலர்களான சுவர்ணா தீபானி, ரசிக்கா ஜயசிங்ஹ, பாம் பௌண்டேஷன் நிறுவனத்தின் பிரதி குழுத் தலைவர் சந்திமா அபேவிக்கிரம உள்ளிட்டடோரும் இவ்விரு மாவட்டங்களின் பெண்கள் அபிவிருத்தி அலுவலர்களும் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் பணியாளர்கள் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்