தமிழரசின் மத்தியகுழுவின் செயற்பாடுகளுக்கு தடைவிதிக்கக் கோரி வழக்கு
கட்சியின் யாப்பை மீறி மத்தியகுழு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தீர்மானங்களுக்கும் தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினருமான சி.சிவமோகன் யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வழக்கு சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் ஊடாக யாழ் நீதிமன்றில் நேற்று புதன் கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் கடந்த 14 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றது.
இதன்போது கட்சியின் தலைவர் யார் என்ற விடயத்தில் குழப்பநிலை ஏற்பட்டிருந்ததுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி அதனை வாக்கெடுப்பிற்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழரசுக் கட்சியின் யாப்பு விதிமுறைகளை மீறி மத்தியகுழு எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும், தீர்மானங்களுக்கும் தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் யாழ் நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வழக்கு எதிர்வரும் நாட்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கட்சியின் கொள்கைகளை வகுப்பதும், செயற்திட்டங்களை வகுப்பதும் கட்சியின் பரிபாலனமும், தலைவர் தெரிவும் பொதுச்சபையின் ஆணைக்கு உட்பட்டவை என்று தமிழரசுக் கட்சியின் யாப்பில் குறித்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்