
செல்லப்பிராணியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற மாணவி : இருவரும் ஒன்றாக உயிரிழந்த சோகம்!
கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்களகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் செல்லப் பிராணியான நாயுடன் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற இவ்விபத்தில். ரம்புக்கன, பொலத்தபிட்டிய பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 26 வயதுடைய பல்கலை மாணவி உயிரிழந்துள்ளார்.
பல்கலை மாணவியின் செல்லப்பிராணியான நாய் கடந்த 4 ஆம் திகதி அன்று வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது மரத்தில் மோதி காயமடைந்துள்ளது.
இதனையடுத்து இந்த பல்கலை மாணவி தனது நாயை கேகாலை தனியார் கால்நடை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ள நிலையில் நாயின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் நாயை பேராதனையில் உள்ள கால்நடை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த பல்கலை மாணவி கடந்த 7 ஆம் திகதி அன்று தனது தங்கை மற்றும் அயல் வீட்டில் வசிக்கும் இளைஞருடன் முச்சக்கரவண்டியில் தனது நாயை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது, எதிர்திசையில் பயணித்த லொறி ஒன்று இவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் காயமடைந்துள்ள நிலையில் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பல்கலை மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தின் போது பல்கலை மாணவியின் நாயும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 58 வயதுடைய லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்