சுவாமி விபுலானந்தர்

சுவாமி விபுலானந்தர்

🛑முத்தமிழ் வித்தகர் என போற்றப்படும் சுவாமி விபுலானந்தர் தமிழுக்கு தொண்டாற்றியவர்களில் மிகவும் முக்கியமானவர் மற்றும் இசைத்தமிழ் ஆய்வு, இலக்கிய ஆய்வு, நாடகத்தமிழ் ஆய்வு, மொழியியல் என ஆய்வுப்பணிகளை விரித்துக் கொண்டவர். யாழ் நூல் என்ற இசைவரலாற்று நூலும், மதங்க சூளாமணி என்ற நாடக ஆய்வு நூலும் இவருடைய முக்கியமான படைப்புகளாகும்.

பிறப்பு

🔸விபுலானந்தர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும் ஊரில் மார்ச் 27, 1892 அன்று சாமித்தம்பி, கண்ணம்மா தம்பதிக்குப் பிறந்தார். இவரது இயற்பெயர் மயில்வாகனன் ஆகும்.

கல்வி

🔸இவருடைய ஆரம்பக் கல்வி கல்முனை மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் இடம்பெற்றது. கேம்பிரிட்ஜ் சீனியர் சோதனையில் சித்தியடைந்த பின்னர், அவர் புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்தார். அதன் பின் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து அங்கு விரிவுரையாளராயிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டையத் தமிழ் இலக்கியத்தைக் கற்றார்.

🔸ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் 1912-ஆம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழுடன் மீண்டும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். 1915-ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் தொழில்நுட்பக்கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916-இல் அறிவியலில் பட்டயத்தையும் பெற்றார். அத்துடன் மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் பங்கேற்று பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதல் பெற்றவர் சுவாமி விபுலானந்தர் ஆவார்.

ஆசிரியர்ப் பணி
  • அர்ச்சம் பந்திராசரியர் கல்லூரி (1919)
  • மானிப்பாய் இந்துக் கல்லூரி (1920)
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (1931-1933)
துறவு வாழ்க்கை

🔸ஆசிரியப் பதவியைத் துறந்து 1922-ல் ராமகிருஷ்ண மிஷனில் இணைந்தார். சென்னையில் மயிலாப்பூர் மடத்தில் சுவாமி சர்வானந்தரால் பிரபோத சைதன்யர் என்னும் பெயருடன் பிரமச்சரிய தீட்சையும்இ சந்நியாச தீட்சையும் வழங்கப்பட்டது. இரண்டு வருடங்கள் அங்கு பயின்றார். 1924-ம் ஆண்டு சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் விவேகானந்தரின் மாணவர் சுவாமி சிவானந்தரிடம் இருந்து துறவு பெற்றுக்கொண்டார். சிவானந்தரால் சுவாமி விபுலானந்தர் என்ற துறவறப்பெயர் வழங்கப்பட்டது. அதன் பின்னர், அவர் இலங்கை திரும்பிஇ இராமகிருஷ்ண மிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார். ஆரம்பக்காலத்தில் சைவசித்தாந்தியாக இருந்தவர் பிற்காலத்தில் முழு வேதாந்தி ஆனார். தான் பயிற்றுவித்த வகுப்புகளில் அனைவருக்கும் ஒரே உணவு, ஒரே இருக்கை என்பதை நடைமுறையில் கொண்டு வந்தார்.

தமிழ்ப் பணி

🔸அறிவியல் கல்வியானது தமிழில் போதிக்கப்பட வேண்டும் என்ற ஆர்வம் இவரிடம் இருந்தது. இவர் அறிவியல் கலை சொல்லாக்கத்துக்காக உழைத்திருக்கின்றார். தமிழ்சங்கம் வெளியிட்ட செந்தமிழ் எனும் இலக்கியத்தில் பல கட்டுரைகளை இவர் எழுதி இருந்தார்.

இசை ஆராய்ச்சி

🔸இராமகிருஷ்ண மிஷன் இமயமலைப் பகுதியில் உள்ள அல்மோரா என்ற இடத்தில் மாயாவதி ஆசிரமத்தில் இருந்து வெளியிடும் ‘பிரபுத்த பாரதம்’ என்ற சஞ்சிகையின் ஆசிரியராக 1934-ஆம் ஆண்டில் விபுலாநந்த அடிகள் நியமிக்கப்பட்டார். அப்போது தான், இசைத் தமிழ் பற்றிய முழுமையான ஆய்வு செய்யப் பெற்று, அரிய நூலாகிய ‘யாழ் நூல்’ உருவாக்கம் பெற்றது.

மறைவு

🔸1947 ஆடி 19-ஆம் நாள் சனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் இறந்தார். அவரது உடல், அவர் உருவாக்கிய மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் நாட்டில் உள்ள பாடசாலைகளிடையே கொண்டாடப்படும் அகில இலங்கை தமிழ் மொழி தினம் சுவாமி விபுலானந்தரின் மறைவு நாள் அன்றே கொண்டாடப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்