சட்டவிரோத செயலில் ஈடுபட பயணித்தவர்களின் வாகனம் விபத்து: ஒருவர் பலி

-மன்னார் நிருபர்-

மன்னார் ஈச்சளவக்கை பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை டிப்பர் வாகனம் தடம் புரண்டதில் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் 2 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

சட்டவிரோதமாக மணல் அகழ்வதற்காக குறித்த டிப்பர் வாகனத்தில் சாரதி உட்பட 4 பேர் பயணித்துள்ளனர்.

இதன்போது சாரதி மதுபோதையில் இருந்துள்ளதுடன் பள்ளமடு பகுதியால் டிப்பர் வாகனம் பயணித்து கொண்டிருந்த நிலையில் சாரதிக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. குறித்த தொலைபேசி அழைப்பினை சாரதி எடுக்க முயன்ற நிலையில் டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த வயலுக்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் டிப்பர் வாகனத்தில் பயணித்த கிஸ்ணசாமி சத்தியபிரபாகரன் (வயது – 31) என்வர் பலியாகியுள்ளதுடன் கிசோ மற்றும் யதுர்சன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேலும் காயமடைந்தவர்கள் பள்ளமடு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய சாரதியை மன்னார் நீதி மன்ற நீதவான் எதிர் வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவு பிரப்பித்துள்ளார்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க