“ஏஹி பஸ்ஸிகோ” (Ehi Passiko) சர்வதேச அமைதிக்கான நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும்.
இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு களனி ரஜமஹா விகாரையில் ஆரம்பமாகும் இந்த அமைதிக்கான நடைபயணம், சுதந்திர சதுக்கத்தை நோக்கி பயணிக்கவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மாலை 4.00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் விசேட அரச விழா நடைபெறவுள்ளது.
இதன்போது, வணக்கத்திற்குரிய பஞ்ஞாக்கர தேரர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிடம் ஸ்ரீ மகா போதியின் கன்று ஒன்றை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளார்.
சுதந்திர சதுக்கத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகும் நடைபயணம், கொழும்பு கங்காராம விகாரையை சென்றடைந்ததும் நிறைவு பெறவுள்ளது.
உலகிற்கு அமைதிச் செய்தியை கொண்டு செல்லும் நோக்கில் கடந்த 22ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமான இந்த “ஏஹி பஸ்ஸிகோ” சர்வதேச அமைதிக்கான நடைபயணம், நேற்று யக்கலையிலிருந்து களனி ரஜமஹா விகாரை வரை வந்தடைந்தது.
இதேவேளை, நடைபயணம் காரணமாக இன்று கொழும்பு நகரின் பல வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பண்டாரநாயக்க சுற்றுவட்டத்திலிருந்து பேஸ்லைன் வீதி பொரளை சந்தி வரையிலும், கங்காராம விகாரையைச் சூழவுள்ள வீதிகளிலும் முற்பகல் 11.00 மணி முதல் அவ்வப்போது போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.