இலங்கை இந்தியாவின் மாநிலமா?

இலங்கை மக்கள் விரும்பினால் இந்தியா – இலங்கை தனது ஒரு மாநிலம் என அறிவிக்க தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார் என வெளியாகியுள்ள டுவிட்டர் செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ள இந்தியா அதனை கடுமையாக சாடியுள்ளது.

இலங்கை மக்கள் இணங்கினால் இலங்கையை இந்தியா தனது இன்னுமொரு

மாநிலமாக அறிவிக்க தயார் அதற்கு பதிலாக இந்தியா இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு உட்பட ஏனைய பிரச்சினைகளிற்கு தீர்வை காணும் நீண்டகால விடயங்களிற்கும் உதவலாம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார் என குறிப்பிடும் டுவிட்டர் செய்தியொன்று மக்களிடையே பரப்பப்பட்டு வருகின்றது.

இந்த டுவிட்டர் செய்தி போலியானது என தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ள இந்திய தூதரகம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் டுவிட்டர் கணக்கிற்குரியதென காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட போலியான படம் தொடர்பாக நாம் அறிந்துள்ளோம். இது முழுக்க முழுக்க போலியானதும் புனையப்பட்டதுமாகும். தீய எண்ணத்துடனான இதன் உள்ளீடுகளை நாம் கடுமையாக மறுக்கின்றோம்.

இந்தியா இலங்கை இடையில் காணப்படும் நட்பு ரீதியானதும் நெருக்கமானதும் தொன்மையானதுமான உறவை பாதிக்கும் வகையில் அவநம்பிக்கைகொண்ட தரப்பினரால் மேற்கொள்ளப்படும் தீய நோக்கத்துடனான இம்முயற்சிகள் ஒருபோதும் வெற்றியடையப்போவதில்லை என தெரிவித்துள்ளது.