இரு வகை தொடர்களில் விளையாடுவதற்கு மேற்கிந்தியத் தீவுகளின் மகளிர் அணி இலங்கை வருகை

பங்களாதேஷில் இந்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம், இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி ஆகியவற்றுக்கு முன்னோடியாக இலங்கையும் மேற்கிந்தியத் தீவுகளும் இருவகையான மகளிர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளன.

இதற்காக மேற்கிந்தியத் தீவுகளின் மகளிர் அணி இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் காலியில் ஜூன் 15, 18, 21ஆம் திகதிகளில் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து ஹம்பாந்தோட்டையில் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச T20 கிரிக்கெட் தொடர் ஜூன் 24, 26, 28ஆம் திகதிகளில் நடைபெறும்.

இலங்கை மகளிர் அணி இந்த தொடருக்குப் பின்னர் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் மகளிர் உலகக் கிண்ண (50) கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதிபெறுவதாக இருந்தால், ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் நிறைவில் அணிகளுக்கான தரவரிசையில் முதல் 6 இடங்களுக்குள் இருக்க வேண்டும்.

தரவரிசையில் முதல் 5 இடங்களில் உள்ள அணிகளும் வரவேற்பு நாடான இந்தியாவும் நேரடியாக உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

மற்றைய இரண்டு இடங்கள் தகுதிகாண் சுற்றின் மூலம் தீர்மானிக்கப்படும்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்