இரவில் இருளில் மூழ்கும் சாவகச்சேரி வைத்தியசாலை : அங்கஜன் திடீர் விஜயம்

-யாழ் நிருபர்-

யாழ். தென்மராட்சி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்  தொடர்ச்சியான மின்தடையால் நோயாளர்கள் அவதியுறும் நிலை தொடர்பில் ஆராய்வதற்காக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் நேற்று நேரடியாக வைத்தியசாலைக்குச் சென்றார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மின்வெட்டு நேரம்  வைத்தியசாலையில் உள்ளம் மின்பிறப்பாக்கிகள் செயலிழந்து காணப்படுவதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.

இந்நிலையில் திடீரென விஜயம் மேற்கொண்ட அங்கஜன் எம்பி வைத்தியசாலையின் பல பகுதிகளை சல்லடை போட்டு ஆராய்ந்தார்.

அங்கு கூடியிருந்த மக்களிடம் வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வினவியபோது இவ்வாறு பதிலளித்தனர்.

நாட்டில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான மின்வெட்டு காரணமாக குறித்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்கள் இரவு நேரங்களில் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

அதுமட்டுமல்லாது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள் நிம்மதியாக சாப்பிட முடியாது தூங்கவும் முடியாமல்  அவதிப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.

இதனையடுத்து வைத்தியசாலையின் மலசலகூட தொகுதியை பார்வையிட்ட அங்கஜன்  பல குறைபாடுகள் இருப்பதை வைத்தியசாலை அத்தியட்சகரிடம் சுட்டிக்காட்டினார்.

வைத்தியசாலையிலிருந்து வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரனை தொடர்பு கொண்ட அங்கஜன் குறித்த வைத்தியசாலையில்  செயலிழந்துள்ள மின் பிறப்பாக்கிகளை  உடனடியாக சீர் செய்யுமாறு சுகாதார பணிப்பாளர் அறிவுறுத்தினார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தொடர்பில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில்   யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மககேசனும்  அங்கஜன் எம்பியுடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.