ரணில் உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைத்தமை அரசியல் கருக்கலைப்பு ஆகும் – டலஸ் அழகப்பெரும

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைத்தமையானது கூட்டு ஊழல் மற்றும் பொருளாதார கொலையின் பின்னரான அரசியல் கருக்கலைப்பு, என சுதந்திர மக்கள் காங்கிரஸ் தலைவர் டலஸ் அழகப்பெரும விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

720 மில்லியன் ரூபாய் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான முன்னாள் அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இரத்து செய்யப்பட்ட தேர்தல்களை நடத்துவதற்கான மொத்த செலவுகள் 8 பில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டிருந்தது.

தேர்தல் இரத்து செய்யப்பட்டதன் ஊடாக 720 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஜனநாயக செயல்முறைகளைக் குறைத்து மதிப்பிட்டது மட்டுமல்லாமல், பொது மக்கள் மீது நிதிச் சுமையையும் ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நிதியைக் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் காலதாமதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்.

எனவே மத்திய வங்கிக் கொள்ளை, சீனி வரி மோசடி, விசா மோசடி என்ற வரிசையில் இதனையும் உள்ளுராட்சி தேர்தல் கொள்ளையாகக் குறிப்பிட்டு குற்றப் பட்டியலில் இடம்பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் கீழ் எத்தகைய சிறப்புரிமைகள் இருந்தாலும் பிரதிவாதிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்