பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாது ஒழிக்கும் 16 நாள் வேலைதிட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு

பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாது ஒழிக்கும் 16 நாள் வேலைத்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

அருவி பெண்கள் வலையமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த நிகழ்வின் முதல் நிகழ்வாக அதிதிகள் வரவேற்கப்பட்டு பிரதான நிகழ்வு காந்தி பூங்கா வளாகத்தில் இடம் பெற்றது.

பெண்களிற்கு எதிரான வன்முறையிலிருந்து பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வூட்டும் வகையில் இன்று முன்னெடுக்கப்பட்ட 16 நாள் வேலைத்திட்டமானது அருவி பெண்கள் வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி மயூரி ஜனன் தலைமையில் இடம்பெற்றதுடன், இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஐஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் அதிதிகள் கௌரவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அதிதிகளின் உரை இடம் பெற்றது. அதன் பின்னர் “உங்கள் உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள்” எனும் தலைப்பிலான சஞ்சிகை அருவி பெண்கள் வலையமைப்பினால் வெளியிட்டு வைத்ததுடன், அதன் முதல் பிரதி பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட சவால்களுக்கான பரிந்துரைகள் அடங்கிய மகஜர் அருவி பெண்கள் வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி மயூரி ஜனனால் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளர் ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு பிரதான பேருந்து தரிப்பு நிலையத்தில் இருந்து பெண்கள் மாத்திரம் இன்றைய தினத்தில் பயணிக்கக் கூடிய வகையில் அருவி பெண்கள் வலையமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவையினை மாவட்ட அரசாங்க அதிபர் ஆரம்பித்து வைத்தார். பெண்களுக்கான ஒரு நாள் இலவச பேருந்து சேவையானது இன்றைய தினம் மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனை வரை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதே வேளை பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணமான விழிப்புணர்வு ஊர்வலமொன்று காந்தி பூங்கா முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பிரதான பேருந்துதரிப்பு நிலையத்தை அடைந்து அங்கிருந்து தாண்டவன்வெளியை சென்றடைந்ததும் நிறைவிற்கு வந்திருந்தது.

இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதேச செயலாளர்களான வீ.வாசுதேவன், சிவப்பிரியா வில்வரத்தினம், இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு டிப்போ பொது முகாமையாளர் உள்ளிட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள், பெண்கள் மற்றும் இளைஞர் யுவதிகள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்