புலத்திலிருந்து வழங்கப்படும் உதவிகள் சரியானவர்களை சென்றடைவதில்லை
-மூதூர் நிருபர்-
புலத்தில் வாழ்கின்ற தமிழர்கள் தாயகத்தில் வாழ்கின்ற ஏழை மக்களுக்கு உதவிகள் செய்ய விரும்பினால் வட கிழக்கில் உள்ள சிவில் சமூகத்தின் ஊடாக நிதியுதவிகளை வழங்குவதுதான் பொருத்தமானதாக இருக்கும் என திருகோணமலை – வெருகல் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.சுந்தரலிங்கம் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சில சுயநலவாத அரசியல்வாதிகளின் ஊடாக நிதிகள் வழங்கப்படும் போது ஏழை மக்களுக்கு அந்த நிதிகள் சென்றடைவதில்லை. ஆகவே நேர்மையானவர்களை கண்டறிந்து ஒரு அமைப்பை உருவாக்கி அந்த அமைப்பின் ஊடாக நிதியுதவிகளை வழங்குவதே எதிர்காலத்தில் பொருத்தமானதாக அமையும்.
புலத்திலிருந்து நீங்கள் செய்கின்ற உதவிகள் அனைத்தும் தனிப்பட்ட நபர்களுடைய அரசியல் செல்வாக்கை மேம்படுத்துவதே அன்றி மாவீரர் குடும்பங்களுக்கோ முன்னாள் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கோ அல்லது ஏழை மக்களுக்கோ அந்த நிதிகள் முழுமையாக சென்றடைவதில்லை.
எனவே இவ்வாறான நிலைமைகளை கருத்திற்கொண்டு வட கிழக்கு தாயகத்தில் வாழுகின்ற மக்களுக்கு சரியான பொறிமுறைகளுடன் உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான தனிப்பட்ட கருத்தாகும் என அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்