தேர்தல் முடிவுகள் ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரத்திற்கான அறைகூவல்: ஜனாதிபதி
அதிகார மையமாக விளங்கும் அமைச்சரவை எந்தளவுக்கு தமது பொறுப்புக்களை நிறைவேற்றுகிறது என்பதன் அடிப்படையிலேயே அரசாங்கத்தின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கான பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் முடிவுகள் ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரத்திற்கான அறைகூவலாக அமைந்தது.
ஒவ்வொரு துறையிலும் முழுச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.
பொதுமக்களின் அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டும்.
இலங்கையை மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி இட்டுச் சென்று நாட்டு மக்களுக்குச் சுதந்திரமான இலங்கை உருவாக்கப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் அதிகாரங்கள் மக்களுக்கு எதிர்மறையாகவே பயன்படுத்தப்பட்டன, எல்லையற்ற அதிகாரம் எம்மை எங்கே கொண்டு செல்லும் என்ற சந்தேகம் சமூகத்திற்கு இருக்கலாம்.
எங்களிடம் அதிகாரம் உள்ளது, நாம் பெற்ற அதிகாரத்தின் வரம்புகள் எமக்கு நன்றாகத் தெரியும்.
மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் பொறுப்பு இந்த அதிகாரத்திற்கு உள்ளது.
ஆணைகள், அரசியலமைப்புகள், சம்பிரதாயங்கள் என எந்த வகையிலும் நமக்கு அதிகாரம் வழங்கப்பட்டாலும், அதனைக் கையாள்வதில் நாம் பொறுப்பு வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்