திருகோணமலையில் 18 வருடங்களுக்கு பின்னர் காணி அளவீடு!
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் மாஞ்சோலைச் சேனை என்னும் ஊரில் வாழ்ந்த மக்கள், 2004ஆம் ஆண்டில் அரசாங்க அதிகாரிகளால் குடிபெயர்க்கப்பட்டுப் பாரதிபுரம் என்னும் இடத்தில் குடியமர்த்தப்பட்டனர்.
இம்மக்கள் குடியிருந்த இடத்தில் சந்தை, இளைஞர் தொழிற் பயிற்சி நிலையம், காவல் நிலையம் முதலியன அமைக்கப்பட்டன.
அவர்களைக் குடிபெயர்த்த பொழுது தாய் சேய் நிலையம், பாலர் பாடசாலை, பூங்கா, நூலகம், கிராம அபிவிருத்திச் சங்க கட்டடம், பலநோக்குக் கட்டடம், விளையாட்டு அரங்கு, கோவில் முதலிய பொதுத் தேவைகளுக்காக 4 ஏக்கர் நிலம் தரப்படும் என்றும் அரசாங்க அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது.
எனினும் இதுவரை இந்த நிலம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.
பாரதிபுரம் மக்களின் பொதுத் தேவைக்கென அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் 14 முஸ்லீம் குடும்பங்கள் அத்துமீறி வீடமைத்து உள்ளனர்.
பாரதிபுரம் மக்களது 18 ஆண்டு அயராத முயற்சியின் பின் இன்று காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் நில அளவையாளர்கள் இக்காணியை அளக்க வந்தனர். இது அம்மக்களுக்கு ஓர் ஒளிக்கீற்று தென்பட்டது போல அமைந்து இருந்தது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டத் தலைவரும், திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவருமாகிய திரு.சண்முகம் குகதாசன் பாதிக்கப்பட்ட பாரதிபுர மக்கள் சார்பில் மேற்படி நில அளவையில் கலந்துகொண்டார்.
இவரோடு முன்னாள் கிண்ணியா நகரசபை உறுப்பினர் திரு.சி.பஞ்சலிங்கம், தமிழரசு இளைஞர் அணியைச் சேர்ந்த திரு.நிராஜ், திரு.இளவரசன் ஆகியோரும் இந்த நில மீட்புக்கான முன்னணிச் செயற்பாட்டாளர் திரு.சிவகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்