தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதையிலேயே செல்கிறது!

கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்துடனான சகல செயற்பாடுகளையும் தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதையிலேயே கொண்டு செல்வதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை கருத்துரைத்த அவர், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முழுமையாக மீறியுள்ளதாக தெரிவித்தார்.

புதிய அரசாங்கம் தெரிவானதிலிருந்து இதுவரையில் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு தொடர்பில் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படும் யோசனைகள் கவனத்திற் கொள்ளப்படவில்லை.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர், கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட உடன்படிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தது.

இதன்படி, சர்வதேச இறையாண்மை பத்திர உரிமையாளர்களுடனான கடன் மறுசீரமைப்பு மற்றும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றின் போது அரசாங்கம் பின்பற்றிய நிலைப்பாடு தொடர்பில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

எதிர்க்கட்சியிலிருந்த போது சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை விமர்சித்த தேசிய மக்கள் சக்தி, தற்போது அதனையே முன்கொண்டு செல்கின்றது.

இது மக்களின் ஆணையைக் காட்டி கொடுக்கும் செயற்பாடாகும். தேர்தலுக்கு முன்னர் மின்கட்டணத்தை மூன்றில் ஒரு பங்கை குறைப்பதாகக் கூறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு தற்போது அவ்வாறு செய்வதில் என்ன? சிக்கல் உள்ளது.

அதேபோன்று எரிபொருள் கட்டணத்தைக் குறைப்பதாகக் கூறிய அரசாங்கம் தற்போது வரை அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை.

ஆரம்பத்தில் எரிபொருள் விலை சூத்திரத்தை விமர்சித்தவர்கள் தற்போது அதனைப் பின்பற்றியே எரிபொருள் விலையைத் திருத்துகின்றனர்.

ஓய்வூதிதாரர்களுக்கான கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளது.

விவசாய சேதங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஆரம்பத்தில் கூறிய அரசாங்கம் தற்போது அவ்வாறு செயற்படுவதில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்