ஆவணங்களை அழித்து விடுவார்கள் என்றே இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

 

-யாழ் நிருபர்-

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்டுள்ள விரும்பத்தகாத செயற்பாடு தொடர்பில் மூன்று உயர் அதிகாரிகள் அடங்கிய விசாரணை குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள ஜெனரத் தெரிவித்தார்.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலரால் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், காங்கேசன் துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேலும் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி அடங்கிய குழுவினர் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் நான்கு உத்தியோகத்தர்கள் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள் என இனங்காணப்பட்டதன் அடிப்படையில் அவர்கள் நால்வரும் தற்பொழுது மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்வாங்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

விரைவில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் இந்த விடயம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரினாலும் எமக்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

எனவே பொலிஸ் நிலையம் ஒன்றில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகள் நடைபெற்று விசாரணை முடிவில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள் குறித்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என தெரிவித்தார்.

எனினும் தற்பொழுது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நான்கு உத்தியோகத்தர்கள் இடமாற்றப்பட்டுள்ளார்கள் ஏனென்றால் அவர்கள் அதே இடத்திலே கடமையாற்றினால் அங்குள்ள ஆவணங்கள் மற்றும் சாட்சிகளை அழித்து விடுவார்கள் என்ற காரணத்தினால் அவர்களை இடம் மாற்றி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை.

இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை பொலிஸ் உயர் மட்டத்தில் விசாரணைகளை விரைவாக செயற்படுத்துமாறு அழுத்தம் பிரயோகித்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்