அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டணத் தளமான ‘GovPay’ அறிமுகப்படுத்தப்பட்டு சில மாதங்களிலேயே, அதன் ஊடாக 3.86 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த டிஜிட்டல் தளத்தின் ஊடாக, கடந்த மே 21ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஒட்டுமொத்தமாக 264,415 பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
அரச வருமான சேகரிப்பை ஒரே டிஜிட்டல் கட்டமைப்பின் கீழ் கொண்டு வரும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இத்தளத்துடன், தற்போது 22 அரச நிறுவனங்கள் இணைந்து தமக்கான கட்டணங்களை அறவிட்டு வருகின்றன.
அத்துடன், நிதித்துறையின் பலத்த பங்களிப்புடன் 14 வங்கிகள் மற்றும் 6 நிதித் தொழில்நுட்ப (FinTech) செயலிகள் ‘GovPay’ தளத்துடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
அதிகளவிலான பணப் பரிமாற்றங்கள் இத்தளத்தின் ஊடாக இடம்பெற்ற போதிலும், பொதுமக்களின் பயன்பாடு இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே காணப்படுகிறது. இதன்படி, இதுவரை 19,727 நபர்கள் மட்டுமே இத்தொழில்நுட்ப முறையைத் தமக்கான பயனர் கணக்காகப் பதிவு செய்துள்ளனர்.
அரசாங்கத்திற்கான கட்டணங்களைச் செலுத்தும் செயல்முறையை மிகவும் திறமையாகவும் விரைவாகவும் மாற்றுவதே ‘GovPay’ திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் அரச செலவீனங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், வேலைப்பணிகளின் வேகம் மற்றும் செயல்திறன் பரந்த அளவில் அதிகரித்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.